பரிதிமாற் கலைஞர் எனப்படும் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரி யார் 1870ஆம் ஆண்டு சூலை மாதம் 6ஆம் நாள் பிறந்தார். இவர் ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார்.
இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை சான்றவர். ‘தமிழ் மொழி வரலாறு’ போன்ற ஆய்வு நூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக நூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும் இயற்றியவர்.இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சூரியநாராயணன் என்பது. பின்னாளில் சூரியநாராயண சாஸ்திரியர் என்று அழைக்கப்பட்ட இவர், தமிழ் மீது கொண்ட பற்றினால் தனது பெயரை வடமொழி கலக்காத தூய தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்டார்.
நவம்பர் 2, 1903இல் பரிதிமாற் கலைஞர் மறைந்தார். 33 ஆண்டுகளே வாழ்ந்து இவர் மறைந்தபோது இவரது பேராசிரியர் மில்லர் (ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர்) பின்வருமாறு புலம்பி அழுதுள்ளது அவரது ஆளுமைக்குச் சான்றாகும்:“என் புருவம் சுருக்கம் ஏறி, கண்களை மறைக்கும் முதுமையில் வாடுகின்றேன் நான்.ஆனால் நடுவயது வருவதற்கு முன்னரே நற்றமிழ்ப்பரிதி அகன்றானே.”மதுரை மாவட்டம், விளாச்சேரியில் பரிதிமாற் கலைஞர் பிறந்து, வாழ்ந்த இல்லத்தை, தமிழ்நாடு அரசு ரூ. 7.90 இலட்சம் மதிப்பீட்டில் சீரமைத்து நினைவில்லமாக மாற்றி, 31 அக்டோபர் 2007 அன்றுதிறந்து வைத்தது. ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில்,இவரது நினைவில்லத்தில் சூலைத் திங்கள் 6ஆம் நாளன்று பரிதிமாற் கலைஞரின் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.